தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.

#image_title
எம் ஜி ஆர் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவானது 50 களில்தான். அப்போது அவர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துவந்தார். அப்படி அவர் கொடுத்த ஒரு சூப்பர்ஹிட் படம்தான் “அலிபாபாவும் 40 திருடர்களும்” திரைப்படம். இந்த படம் எம் ஜி ஆரின் வாழ்க்கையில் மிக முக்கியமான பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
அதற்கு முக்கியக் காரணம் இந்த படம் முழுவதும் வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்ததுதான். தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட முழுநீள வண்ணத் திரைப்படம் இந்த படம்தான், ஜெர்மனியைச் சேர்ந்த தொழில்நுட்பத்தில் கேவா கலர் வண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் அந்த வண்ணக் கலவைக்காகவே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதற்கு ஏற்றவாறு படத்தின் கதையும் விறுவிறுப்பான ஒன்றாக இருக்க, படம் பிய்த்துக் கொண்டு ஓடியது.
