தனித்தீவுக்குள் ஒரு தனி ஆள், எங்கு திரும்பினாலும் பொம்மைகள், இரவில் அலையும் அமானுஷ்யம், கதிகலங்கவைக்கும் பொம்மைத் தீவு

By Arun on சித்திரை 11, 2024

Spread the love

பொதுவாக ஒரு தீவிற்கு சுற்றுலா செல்கிறார்கள் என்றால் அந்த தீவில் இருக்கும் மரங்கள், செடிகள், மலைகள், கடல், ஆறு போன்ற இயற்கை சூழலை ரசிக்கவே செல்வார்கள். ஆனால் பொம்மைகள் நிறைந்த ஒரு அமானுஷ்ய தீவிற்குள் மக்கள் சுற்றுலா தளம் போல் சுற்றிவிட்டு வருவதை நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அப்படி ஒரு பொம்மைத் தீவைதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

மெக்ஸிகோவைச் சேர்ந்த டான் ஜூலியன் என்பவர், நகர வாழ்க்கையில் இருந்து விடுபட நினைத்தார். திருமணம் செய்துகொள்ளாத அவர் எதாவது ஒரு ஆளில்லா தீவிற்குச் சென்று அங்கயே தனியாக இருந்துவிடுவேண்டும் என்று நினைத்து பொட்டியை கட்டினார். அப்படி அவர் பொட்டியை இறக்கிய தீவுதான் சினாம்பஸ்.

   

ஷோசிமில்கோ என்ற கால்வாயை ஒட்டி அமைந்த தீவு அது. அல்லிக்கொடிகள் நிறைந்திருக்குமாம் அந்த தீவில். அந்த தீவை விலைக்கு வாங்கி அங்கேயே ஒரு இருப்பிடத்தை அமைத்து அங்குள்ள நிலத்தில் விவாசாயம் செய்து வாழத்துவங்கினார் ஜூலியன்.

   

 

விவசாயத்தில் கிடைத்த காய்கறிகளை விற்பதற்காக மட்டுமே நகரத்திற்குச் சென்று வந்தார் ஜூலியன். ஒரு நாள் அந்த தீவில் அல்லிக்கொடிகள் நிறைந்துகிடக்கும் ஒரு நீர்ப்பரப்பில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தபோது அந்த நீர்ப்பரப்பில் ஒரு சிறுமியின் சடலம் மிதந்துகொண்டிருந்தது. திடுக்கிட்டுப்போன அவர் சற்று அதிர்ச்சியுடன் அதனை பார்த்துக்கொண்டிருந்தார்.

அன்று இரவு அவருக்கு தூக்கமே வரவில்லை. அந்த பெண் எப்படி இறந்திருப்பாள் என்று நினைத்து மிகவும் கவலையோடவே இருந்தார். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்த நீர்ப்பரப்பிற்குச் சென்றார். அப்போது அங்கு அந்த சிறுமி மிதந்துகொண்டிருந்தது போலவே ஒரு பொம்மை மிதந்துகொண்டிருந்தது.

அந்த பொம்மையை நீரில் இருந்து வெளியே எடுத்தார். அந்த பொம்மைக்கு பட்டுத்துணி அணியப்பட்டிருந்தது. பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. இது நிச்சயம் அந்த சிறுமியின் பொம்மையாகத்தான் இருக்கும் என நினைத்து அந்த சிறுமியின் ஞாபகார்த்தமாக அந்த நீர்ப்பரப்பின் அருகில் இருக்கும் ஒரு மரத்தில் அந்த பொம்மையை கட்டித் தொங்கவிட்டு இருப்பிடத்திற்குச் சென்றார்.

அன்று இரவு யாரோ அவரது இருப்பிடத்திற்கு வெளியே நடந்து செல்வது போல் அவருக்கு தோன்றியது. அவருக்கு அருகில் யாரோ மூச்சுவிடுவது போல் சத்தம் கேட்டது. அந்த தீவில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை எனும்போது இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என அவருக்கு பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது. அதன் பின் இருப்பிடத்திற்கு வெளியே பார்த்தபோது ஒரு உருவம் அவரது கண்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அடுத்த நாள் காலை எழுந்தபோது நிச்சயம் அந்த சிறுமியின் ஆவிதான் இங்கே உலவிக்கொண்டிருப்பதாக எண்ணினார். அமைதி இழந்த ஆன்மாதான் ஆவியாக அலையும் என்று முடிவு செய்த ஜூலியன், காய்கறிகளை விற்பதற்காக நகரத்திற்கு போய் வரும்போது நிறைய பொம்மைகளை வாங்கி வந்தார். அமைதியிழந்த அந்த சிறுமியின் ஆன்மாவை ஆசுவாசப்படுத்த அந்த தீவில் இருக்கும் மரங்களில் எல்லாம் பொம்மைகளை கட்டித் தொங்கவிட்டார்.

இப்போது அவருக்கு நிம்மதியாக தூக்கம் வந்தது. பொம்மைகளை கட்டித் தொங்கவிடுவதால் அந்த சிறுமியின் ஆன்மா சந்தோஷம் கொள்கிறது என்று நினைத்துக்கொண்ட ஜூலியன், அடிக்கடி நகரத்திற்கு சென்று பல பொம்மைகளை வாங்கி வந்து தீவில் உள்ள மரங்களில் கட்டித் தொங்கவிடத் தொடங்கினார்.

நகரத்திற்குச் செல்லும்போதெல்லாம் அவரது நண்பர்களும் உறவினர்களும் அவரது நடத்தையில் வித்தியாசத்தை கண்டுபிடித்தனர். ஜூலியனிடம் அது குறித்து விசாரித்தபோது அவர் கூறிய அந்த சிறுமியின் கதையை அவர்கள் நம்பவில்லை. யாரும் தீவிற்குள் வந்து தன்னை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காகதான் இப்படி ஒரு பேய் கதையை ஜூலியன் அவிழ்த்துவிடுகிறார் என்று நினைத்துக்கொண்டார்கள்.

கிட்டத்தட்ட 50 வருடங்கள் அந்த தீவிற்குள் இவ்வாறு புதிய புதிய பொம்மைகளை வாங்கி வந்து மரங்களில் கட்டி தொங்கவிட்டபடியே வாழ்ந்து வந்தார் ஜூலியன். அது 2001 ஆம் ஆண்டு. வழக்கம்போல் காய்கறி விற்க நகரத்திற்கு போகும் ஜூலியன் பல நாட்களாக போகவே இல்லை.

ஆளையே காணோமே என்று ஜூலியனைத் தேடி அவரது உறவினரான ரோஜெலியோ தீவிற்குள் வந்தார். அந்த சிறுமி இறந்துகிடந்த அதே நீர்ப்பரப்பில் ஜூலியனும் இறந்துகிடந்தார்.

ஜூலியனின் இறப்பிற்குப் பிறகு பத்திரிக்கைகள்அனைத்தும் அந்த பொம்மைத் தீவை குறித்தும் ஜூலியனை குறித்தும் எழுதி தள்ளின. டிவி நிறுவனங்கள் கேமராக்களுடன் அந்த தீவிற்கு படையெடுத்தன. அதன் பின் அந்த தீவு ஒரு சுற்றுலாத் தளமாக ஆகிப்போனது.

பல கொடூரமான பொம்மைகள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருப்பதை பார்க்க மெக்ஸிகோ மக்கள் பலரும் அந்த தீவிற்கு சுற்றுலா வந்தார்கள். வருபவர்களில் பலரும் புதிய புதிய பொம்மைகளை வாங்கி வந்து அங்கிருந்த மரங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள்.

ஜூலியனின் உறவினரான ரோஜெலியோதான் இப்போது அந்த தீவை பராமரித்து வருகிறாராம். அவர் அந்த தீவில் இரவு தூங்கும்போதெல்லாம் யாரோ அங்கே நடமாடும் சத்தம் இன்னும் கேட்பதாக ரோஜெலியோ கூறுகிறாராம். ஜூலியனின் ஆன்மாவும் அந்த சிறுமியும் ஆன்மாவும் சாந்தியடையட்டும்….