மக்களே மறந்துடாதீங்க..! இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.. முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்..!!

By Soundarya on ஆனி 28, 2026

Spread the love

குழந்தைகளைப் பாதிக்கும் போலியோ வைரஸ் நோயைத் தடுப்பதற்காக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமை, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் வைத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைக்கிறார். தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி ஏற்கனவே சொட்டு மருந்து பெற்றிருந்தாலும், முகாம் நாளில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த முகாமின் மூலம் 5 வயதிற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க அனைத்து விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

   

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28ஆம் தேதி அனைத்து மையங்களிலும், ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தற்காலிக மையங்களிலும் இந்த சொட்டு மருந்து வழங்கப்படும். பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இதன் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.