அதிர்ச்சி…! கடன் வேண்டுமா?… தமிழக முதல்வர் விஜய் பெயரில் மோசடி… மெகா ஆன்லைன் கொள்ளை… லட்சங்களை இழந்த பொதுமக்கள்…!!

By Gayathri on புரட்டாதி 1, 2026

Spread the love

இணையவழி மோசடிக்காரர்கள் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெயரைப் பயன்படுத்தி புதிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ‘விஜய் பவுண்டேஷன்’ என்ற பெயரில் தொழில் தொடங்க நிதியுதவி, கல்விக்கடன் மற்றும் மானியம் தரப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும், தொலைபேசி வாயிலாகவும் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறிய இந்தக் கும்பல், அவர்களிடம் ஒரு இணைய இணைப்பை அனுப்பி பதிவு செய்யச் சொல்லியுள்ளது. அந்த இணைப்பில் பதிவு செய்தவர்களிடம், சரிபார்ப்புக் கட்டணம் மற்றும் முன்பணம் என்ற பெயரில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பச் சொல்லி நூதன முறையில் ஏமாற்றியுள்ளனர்.

இந்த மோசடியை நம்பிய இந்தூர் மக்கள் பலரும் தலா 50 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தித் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள இந்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இந்த மோசடிக்குப் பின்னால் உள்ளவர்களைப் பிடிக்க, டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் செல்போன் எண்களைக் கூடுதல் டி.ஜி.பி ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முதலமைச்சர் விஜய்யின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும், இந்தப் போலி அறக்கட்டளை குறித்தும் தமிழ்நாடு காவல்துறைக்கும் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.