“நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்”…. புதிய தலைமுறை விஜயன் போன் பறிமுதல் பின்னணி….. சீறிய வேல்முருகன்… காவல்துறை விசாரணையை அம்பலப்படுத்திய அறிக்கை….!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நடத்தி வரும் விசாரணை மற்றும் அவரது கைப்பேசி கைப்பற்றப்பட்ட விவகாரம் தமிழக ஊடகத்துறையிலும் அரசியல் தளத்திலும் பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வரும் சூழலில், சட்டத்தை நிலைநாட்டும் காவல்துறை தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு, மனித உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் மதித்து நடக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை, தற்போதைய சனநாயகச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி ஆஜரான பத்திரிகையாளர் விஜயனைப் பல மணி நேரம் விசாரித்ததோடு, நள்ளிரவில் மீண்டும் வரவழைத்து, முறையான விளக்கங்கள் ஏதுமின்றி அவரது கைப்பேசியைக் கைப்பற்றியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் ஒரு பத்திரிகையாளரை நீண்ட நேரம் காவல் நிலையத்திலேயே முடக்கி வைத்திருப்பது சனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

ஒரு பத்திரிகையாளரின் கைப்பேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைக் கைப்பற்றுவது என்பது வெறும் தனிநபர் உரிமை சார்ந்தது மட்டுமல்ல; அது ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாடு, செய்தி ஆதாரங்களின் பாதுகாப்பு மற்றும் கருத்துரிமை ஆகியவற்றோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டது ஆகும். எனவே, இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் முழுமையான சட்டப்பூர்வக் காரணங்களுடனும், உச்சக்கட்ட பொறுப்புணர்வுடனும் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்தை அமல்படுத்தும் காவல் துறையே உரிய சட்ட நடைமுறைகளைப் புறக்கணிக்கிறது என்ற அவநம்பிக்கை மக்கள் மத்தியில் பரவ அரசு அனுமதிக்கக் கூடாது.

   

பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஊடக நிறுவனங்களுக்கானது மட்டுமல்ல, அது உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் மக்களின் சனநாயக உரிமையுமாகும். எனவே, பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணை முழு வெளிப்படைத்தன்மையுடன், சட்ட வரம்புகளுக்குள் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும். மேலும், ஊடகப் பணியாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற அச்சத்தை போக்கும் வகையில், முதல்வர் அவர்கள் காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, கைப்பற்றப்பட்ட கைப்பேசி குறித்த சட்டப்பூர்வ விளக்கத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாகும்.