சென்னையில் ஒரே இரவில் பெய்த கனமழைக்குப் பிறகு, ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் அழைக்கப்படவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மழைக்காலப் பணிகளில் ஓரங்கட்டப்படுவதாகக் கூறி, துணை மேயர் மகேஷ்குமார் பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், அதிகாரிகளுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையே தகவல் தொடர்பு தாமதமாவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இருப்பினும், அரசின் விமர்சனங்களுக்கு நடுவே துணை மேயர் மகேஷ்குமார் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பிராட்வே, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு மழை பாதிப்புப் பகுதிகளில் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். மேலும், மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை அகற்ற கூடுதல் தற்காலிகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மறுபுறம், சென்னையில் மக்கள் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதற்கு முந்தைய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளே காரணம் என்று மேயர் பிரியா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஜூன் மாதத்திலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள மேயர் பிரியா, தவெக அரசு தாமதமாகவே களமிறங்கியதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், மழைநீர் வடிகால் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட ரூ.4,000 கோடி வீண் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறு என்றும் அவர் மறுத்துள்ளார். அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான ஒருங்கிணைப்பு குறைபாடு மற்றும் அரசியல் ரீதியான விமர்சனங்கள் தற்போது சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
