“இனி மேயர் இல்ல MLA தான்?”…. சென்னை மாநகராட்சியில் திடீர் திருப்பம்…. 2026-ல் பிரியா ராஜன் எடுக்கப்போகும் அந்தப் பெரிய முடிவு…..!

By Nanthini on மாசி 15, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆர்.ராஜன், வட சென்னையில் உள்ள திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளில் அவர் தற்போதே ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

மேயர் பிரியா மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்களும் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, துணை மேயர் மகேஷ்குமார் வேளச்சேரி அல்லது சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அவர்கள் தங்களுக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் சீட் கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

   

வட சென்னையைப் பொறுத்தவரை அமைச்சர் சேகர்பாபுவும், தென் சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியனும் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்குகின்றனர். இதனால், தேர்தலில் போட்டியிட விரும்பும் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், இந்த அமைச்சர்களைத் தொடர்ந்து சந்தித்து தங்களின் விருப்பப் பட்டியலை வழங்கி வருகின்றனர். தங்களுக்குச் சாதகமான தொகுதிகளைப் பெறுவதற்காக அமைச்சர்களின் வீடுகளில் கட்சி நிர்வாகிகள் படையெடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

   

ஏற்கனவே கவுன்சிலர்களாகப் பணியாற்றி வரும் பலருக்கு எம்.எல்.ஏ ஆகும் ஆசை எழுந்துள்ள நிலையில், திமுக தலைமை யாருக்கு வாய்ப்பளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலும் கவுன்சிலர்கள் பலர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தங்கள் கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் வேட்பாளர் தேர்வில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.