2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய சேர்க்கையாக ஆல் இந்தியா பீப்பிள் டெவலெப்மெண்ட் பார்ட்டி (AIPDP) இணைந்துள்ளது. சேலத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்த AIPDP நிறுவனர் மற்றும் தலைவர் PS மாரிச்செல்வம், வரவிருக்கும் தேர்தலுக்கான தனது கட்சியின் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார். அதிமுக (NDA) கூட்டணியில் இணைந்து செயல்படப் போவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது, தேர்தல் பணிகளில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை கணிசமாகப் பெற்றுள்ள AIPDP, கடந்த காலங்களில் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது. இந்த ஆதரவு, குறிப்பாக தென் தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்த உதவும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பெரிய கட்சிகளுடன் சிறிய கட்சிகள் கைகோர்ப்பது தேர்தலின் வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், மாரிச்செல்வத்தின் இந்த வருகை அதிமுக கூட்டணிக்கு ஒரு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
