நடிகர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். கடந்த 1994-ஆம் ஆண்டு சரத்குமாரின் நாட்டாமை படத்தில் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நடிகர் பாண்டியராஜுடன் இணைந்து தாய்க்குலமே தாய்க்குலமே படத்திலும் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது மகேந்திரனுக்கு கிடைத்தது.
பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோபாலா கோபாலா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற சாதனையைப் படைத்தார் மகேந்திரன்.
அதன் பின்னர் ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி மகேந்திரன் நடித்த விழா ஆனந்தம், விந்தை, நாடோடி கனவு, விரைவில் ஆசை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பை தரவில்லை. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மகேந்திரன் நடித்து கவனம் பெற்றார்.
இப்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இந்நிலையில் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சூர்யவம்சம் திரைப்படத்தில் சரத்குமாரின் மகனாக நடிக்க மாஸ்டர் மகேந்திரன்தான் முதலில் கமிட் ஆனாராம்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அவர் அதிகாரமாக “எனக்கு எத்தனை நாள் ஷூட்டிங்? என்னா டயலாக்? என்னன்ன ஆங்கிள்ல எடுக்கப் போறீங்க?” என அதிகாரம் செய்வது போல கேட்டுள்ளார். அதனால் கடுப்பான இயக்குனர் விக்ரமன் “முதல்ல இந்த பையன அனுப்பிடுங்க… கோபத்துல நான் எதாவது அடிச்சுட கிடிச்சுட போறேன்” என அனுப்பிவிட்டாராம். அதன் பிறகுதான் அந்த வேடத்துக்கு பெண் குழந்தையான ராகவியை ஆண் குழந்தை போல மேக்கப் போட்டு நடிக்க வைத்துள்ளனர்.
மகேந்திரன் அறியாத வயதில் அப்படி பேசியது கூட பரவாயில்லை. ஆனால் இப்போது வளர்ந்து கதாநாயகன் ஆகவேண்டும் என ஆசைப்படும் நிலையிலும் கூட இதே போலதான் இயக்குனர்கள் வேலையில் மூக்கை நுழைப்பதாக அவர் மேல் புகார்கள் எழுந்துள்ளன. அதனால்தான் அவரால் ஹீரோவாக உருவாக முடியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.