பொலிவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், 100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய காட்டுப் பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பொலிவியாவில் காட்டுப்பகுதி அருகே கிடைத்த குட்டிப் பூனையின் வித்தியாசமான செயல்பாடுகள் மற்றும் தோற்றத்தை அடுத்து, அது வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரியல் நிபுணரும் தேசிய புவியியல் ஆய்வாளர் ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகளைக் கொண்ட இந்தச் தனித்துவமான காட்டுப் பூனையை நேரில் ஆய்வு செய்து நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்தார்.
ஆரம்பகட்ட ஆய்வுகளில், இந்த பூனை ஏற்கனவே அறியப்பட்ட சிறுத்தை டைக்ரினஸ் இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகளால் கருதப்பட்டது. இருப்பினும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் மரபணு பகுப்பாய்வுகளின் முடிவில், இது முற்றிலும் புதிய மற்றும் அறிவியலால் இதுவரை அடையாளம் காணப்படாத தனித்துவமான பூனை இனம் என்பது உறுதி செய்யப்பட்டது.
பூனை குடும்பத்தில் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இன்னும் அறிவியலுக்குத் தெரியாத வனவிலங்குகள் இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் இந்த ஆய்வு முடிவுகள் ‘Current Biology’ என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டு, வனவிலங்கு ஆராய்ச்சித் துறையில் பெரும் வரவேற்பையும் ஆர்வத்தையும் பெற்றுள்ளன.
