சென்னை ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜ் (58) என்பவர், தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றி மிகவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்புதான் இவர் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வந்துள்ளார். கொலையுறுவதற்கு முந்தைய நாள், இவர் தனது மனைவி செல்வராணியுடன் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்று துணிகளையும் வாங்கியுள்ளார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜீக்கும் அவரது மனைவி செல்வராணிக்கும் இடையே அடிக்கடி தகராறும் சண்டையும் நடந்து வந்தது தெரியவந்தது. வழக்கின் பின்னணியைக் கண்டறியச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் போது, மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று வந்த நபர் யார் என்று ஆராய்ந்தபோது வழக்கில் அதிரடித் திருப்புமுனை ஏற்பட்டது. அந்த நபர் தேவா என்பது தெரியவந்ததையடுத்து, இக்கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளது.
