தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சென்னை பனையூர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. தொடக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் திரண்டு வந்து மனுக்களைப் பெற்றதால், கட்சி வட்டாரத்தில் பெரும் எழுச்சி காணப்பட்டது. நேரில் சுமார் 10,000 பேரும், ஆன்லைன் வாயிலாக சுமார் 40,000 பேரும் என மொத்தம் 50,000-க்கும் மேற்பட்டோர் மனுக்களைப் பெற்றதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மனுக்களைப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் ஒப்படைக்காதது தற்போது கட்சித் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெறப்பட்ட 50,000 மனுக்களில் வெறும் 5,000-க்கும் குறைவான மனுக்களே இதுவரை தலைமையிடம் வந்து சேர்ந்துள்ளன. அதிலும் பல மனுக்களில் உரிய கட்டணத்திற்கான வரைவோலை (DD) இணைக்கப்படவில்லை என்பது கூடுதல் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஆர்வத்துடன் மனுக்களை வாங்கியவர்கள், பணத்தைக் கட்ட வேண்டிய சூழல் வந்தவுடன் பின்வாங்கியது கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. மாநில நிர்வாகிகளை நேரில் வரவழைத்த அவர், “உங்களை நம்பித் தான் கட்சி ஆரம்பித்தேன்” என்று ஆவேசப்பட்டதோடு, மனுக்கள் திரும்ப வராததற்கான காரணங்களைக் கேட்டு மிகக் கடுமையான முறையில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். கூட்டமாகத் திரண்டு வருபவர்கள் அனைவரும் வாக்குகளாகவும், உறுதியான தொண்டர்களாகவும் மாறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் விஜய்யை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது நிலவும் இந்தச் சூழலைச் சரிசெய்யும் பொருட்டு, விருப்ப மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மனுக்களைப் பெற்றவர்கள் உடனடியாக அவற்றை பூர்த்தி செய்து ஒப்படைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்குக் கட்சித் தலைமை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலுக்கு முன்பே ஏற்பட்டுள்ள இந்தத் தொய்வு, கட்சியின் தேர்தல் வியூகங்களில் மாற்றங்களைக் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
