புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சமீபகாலமாகத் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பகுதி வணிகர்களும் பொதுமக்களும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இத்தகைய சூழலில், அறந்தாங்கியின் பிரதான கடைவீதியில் பைனான்ஸ் அதிபர் ஒருவரை மர்ம நபர்கள் பட்டாக்கத்திகளுடன் நடுரோட்டில் விரட்டி மிரட்டிய அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரின் மகன் பாண்டியன், அருகன் குளம் சாலையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் அறந்தாங்கி தாலுகா மோட்டார் வாகன மறுவிற்பனை சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரிடம் அரசர்குளம் வடபாதி கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவர், பழைய பைக் வாங்கித் தருவதாகக் கூறி ‘அம்மா இருசக்கர வாகன விற்பனை கடை’ நடத்தி வரும் பாண்டிக்கௌதம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தன்னிடம் ₹50,000 வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார். சங்கத் தலைவர் என்ற முறையில் பாண்டியன் தலையிட்டு, பாண்டிக்கௌதமிடம் பேசி பணத்தைத் திருப்பித் தர கால அவகாசம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இருப்பினும், சொன்னபடி பாண்டிக்கௌதம் பணத்தைத் தராததால் பாண்டியன் மீண்டும் அதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாண்டிக்கௌதம், கடந்த 18-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் முகமூடி அணிந்த இரு நபர்களுடன் பாண்டியனின் பைனான்ஸ் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது சாலையோரம் நின்றிருந்த பாண்டியனிடம், “நீ கட்டப்பஞ்சாயத்து செய்கிறாயா?” என்று கேட்டுக்கொண்டே, முகமூடி அணிந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்திகளை எடுத்து அவரை வெட்டப் பாய்ந்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்கப் பாண்டியன் அலறியடித்துக் கொண்டு ஓடியபோது எதிர்பாராதவிதமாகத் தரையில் தவறி விழுந்துள்ளார். அதற்குள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே, பாண்டிக்கௌதம் கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதல் முயற்சி குறித்துப் பாண்டியன், தப்பியோடியவர்களின் சிசிடிவி (CCTV) காட்சிகளுடன் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிசார் சிசிடிவி பதிவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வழக்குப் பதிவு செய்தும் அடுத்தகட்டமாக எந்தவொரு தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கால் அதிருப்தியடைந்த பாண்டியன், திருச்சி மண்டல காவல்துறைத் தலைவரை (IG) நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளார். அறந்தாங்கியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த பட்டாக்கத்தி கலாச்சாரமும், ரவுடிகளின் ஆதிக்கமும் தங்களை ரவுடிகளின் கூடாரத்தில் வாழ்வது போன்ற உணர்வைத் தருவதாகவும், போலிசார் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
