ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி இரண்டு குழந்தைகளின் தாயான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிக் கட்டாயக் கருக்கலைப்பு செய்த தவெக நிர்வாகி மீது அளிக்கப்பட்ட புகார் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஜாக்குலின் மேரி என்ற பெண் தவெகவில் உறுப்பினராகச் செயல்பட்டு வந்துள்ளார். அப்போது அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சசிகுமார் தமக்கு நெருக்கமாகி, கட்சியில் முக்கியப் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தமது வீட்டிற்கு வரவழைத்துத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அந்தரங்க வீடியோக்களைக் காட்டி மிரட்டியதுடன், தம்மைக் கர்ப்பமாக்கி பின்னர் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யச் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை அரக்கோணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் தளபதி மணியிடம் முறையிட்டபோது, அவரும் புகாரைப் பெரிதுபடுத்த வேண்டாம் என மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான ஜாக்குலின் மேரி அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
