தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் ஏற்கனவே பதவிக்காலம் முடிந்த நிலையில், தற்போது மீதமுள்ள 9 மாவட்டங்களின் பதவிக்காலமும் நிறைவடைந்துள்ளது. இதனால் தற்போது கிராமப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் சிறப்பு அதிகாரிகளின் நிர்வாகத்தில் இயங்கி வருகின்றன. மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.
முன்னதாக 2016-ல் வழக்குகள் மற்றும் அரசியல் சூழல்களால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனது. பின்னர் அதிமுக ஆட்சியில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கும், அதைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் என இருவெவ்வேறு கட்டங்களாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தற்போது வாக்குப்பதிவுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகத் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
இத்தகைய சூழலில், நகர்ப்புற உள்ளாட்சிகளின் பதவிக்காலமும் பிப்ரவரியில் முடிவடைவதைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்த அதிகாரிகள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு, வரும் ஏப்ரல் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று முதல்வருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
