கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகாலில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த மணமகன் மீது, மணப்பெண்ணின் காதலன் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குனகல்லி கிராமத்தைச் சேர்ந்த ரவிஷ் என்பவருக்கும், நயனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண வரவேற்புக்காக ஜனவரி 29 அன்று ரவிஷ் தனியாக காரில் மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரவிஷின் காரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரவிஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணப்பெண் நயனாவின் காதலரான தர்ஷன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது அம்பலமானது.
விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவலின்படி, நயனாவும் தர்ஷனும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். ரவிஷுடன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்த விரும்பிய நயனா, குடும்ப கௌரவத்திற்காகத் தானே முன்வந்து திருமணத்தை மறுக்காமல், தனது காதலன் தர்ஷனை ஏவி ரவிஷைத் தாக்கச் சொல்லியுள்ளார். இதற்காக ரவிஷின் மொபைல் எண் மற்றும் அவர் வரும் வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை நயனாவே தர்ஷனுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சதிச்செயல் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, ரவிஷ் நயனாவைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனையடுத்து, மணப்பெண் நயனா, அவரது காதலன் தர்ஷன் மற்றும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சினிமாவில் நடப்பதைப் போன்ற இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள சிலரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
