“ஜெயலலிதா ஆவி தான் என்னைத் துரத்தியது”… எடப்பாடியை அதிர வைத்த மனோஜ் பாண்டியன்… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மனோஜ் பாண்டியன், அண்மையில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், தான் திமுகவில் இணைந்ததற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆவிதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி (EPS) விமர்சித்ததைச் சுட்டிக்காட்டி, அதற்கு அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஆவிதான் தன்னை திமுகவுக்கு அனுப்பியது என்பதை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஒரு கொள்கையற்ற கூடாரமாக மாறிவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். அதிமுகவை டெல்லியிடம் அடகு வைத்துவிட்டு, ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட நடத்த முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், டெல்லியை எதிர்த்துப் போராடும் திமுக எனும் தாய் கழகத்திற்குத் தன்னை அனுப்பி வைத்ததற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்தார்.

   

மேலும், எடப்பாடி பழனிசாமியை கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு துரத்தும் என்று எச்சரித்த மனோஜ் பாண்டியன், அந்தச் சம்பவத்தின் போது சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து ஏன் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். கொடநாடு என்றாலே எடப்பாடி பழனிசாமிக்குப் பயம் என்றும், சட்டம் அவரை விடாது என்றும் அவர் தனது உரையில் அனல் பறக்கப் பேசினார்.

   

அதிமுக என்பது தற்போது தொண்டர்கள் இல்லாத ஒரு ‘டெண்டர் கட்சி’யாக மாறிவிட்டதாக எள்ளி நகையாடிய அவர், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ-வாக தான் இருந்தபோது தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். தனது பழைய அரசியல் அடையாளங்களைத் துறந்து, திமுகவின் வளர்ச்சிப் பாதையில் கைகோர்த்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.