ஜஸ்ட் மிஸ்.. அதெல்லாம் நடந்திருந்தால்?.. மனோஜ் தவறவிட்ட படங்களா இவையெல்லாம்!

By vinoth on மார்ச் 28, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். அதனால் ‘கல்லைக் கூட மிகச்சிறப்பாக நடிக்க வைக்கக்கூடியவர் பாரதிராஜா’ என்று அவரைப் பற்றி பெருமையாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் தன் மகனை அவரால் ஒரு வெற்றிகரமான நடிகராக உருவாக்க முடியவில்லை.

   

   

அப்பாவைப் போலவே இயக்குனர் ஆக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்த மகன் மனோஜைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அவரை பிரம்மாண்டமாக தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அந்த படம் ப்ளாப் ஆனது. மனோஜால் நடிகராக பெரியளவில் சாதிக்க முடியாமலேயே போனது.

 

இந்நிலையில் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்னர் அவரளித்த நேர்காணலில் “எனக்கு நடிகராக ஆகும் ஆசையே இல்லை. அப்பா போல இயக்குனர் ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்பா படத்தின் ஷூட்டிங்கில் எல்லாம் சென்று உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். ஆனால் அப்பாதான் என்னைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அதனால் அவருக்காகதான் நான் நடிகர் ஆனேன்.” எனக் கூறியிருந்தார்.

மனோஜ் நடிகராக அறிமுகமாகி சில படங்கள் நடித்து பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் இயக்குனர் ஆகவேண்டும் என முடிவை மாற்றிக்கொண்டார். இதற்கிடையில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘குஷி’ படத்தில் முதலில் இவர்தான் நடிப்பதாக இருந்தாராம். அதை பாரதிராஜா தயாரிப்பதாக இருந்தாராம். ஆனால் அது நடக்கவில்லை. அதே போல ஜீவாவுக்கு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த ‘கற்றது தமிழ்’ படத்திலும் முதலில் மனோஜ்தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இந்த இரண்டு படங்களும் அவருக்குக் கிடைத்திருந்தால் ஒருவேளை அவரின் திரை வாழ்க்கை வேறு மாதிரியாகக் கூட அமைந்திருக்கும்.