Throwback: நடிக்கும் ஆசையே இல்லை… எங்க அப்பாதான் என்னை கட்டாயப்படுத்தினார்- தன்னுடைய கனவைப் பகிர்ந்த மனோஜ் !

By vinoth on பங்குனி 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். அதனால் ‘கல்லைக் கூட மிகச்சிறப்பாக நடிக்க வைக்கக்கூடியவர் பாரதிராஜா’ என்று அவரைப் பற்றி பெருமையாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் தன் மகனை அவரால் ஒரு வெற்றிகரமான நடிகராக உருவாக்க முடியவில்லை.

   

அப்பாவைப் போலவே இயக்குனர் ஆக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்த மகன் மனோஜைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அவரை பிரம்மாண்டமாக தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அந்த படம் ப்ளாப் ஆனது. மனோஜால் நடிகராக பெரியளவில் சாதிக்க முடியாமலேயே போனது.

   

 

அதன் பின்னர் வெளிநாடு சென்று திரைக்கதை மற்றும் இயக்கம் குறித்த படிப்பு ஒன்றை முடித்துவிட்டு வந்து மனோஜ் ’மார்கழி திங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்னர் அவரளித்த நேர்காணலில் “எனக்கு நடிகராக ஆகும் ஆசையே இல்லை. அப்பா போல இயக்குனர் ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்பா படத்தின் ஷூட்டிங்கில் எல்லாம் சென்று உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். ஆனால் அப்பாதான் என்னைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அப்பா நடிகராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தார். ஆனால் இயக்குனர் ஆகிவிட்டார். ஆனால் நான் நடிகராக வேண்டும் என அப்பா ரொம்ப ஆசைப்பட்டார். அதனால் அவருக்காகதான் நான் நடிகர் ஆனேன்.” எனக் கூறியிருந்தார்.