மதுரை வடக்கு தொகுதி விவகாரம் மற்றும் திமுக மாவட்டச் செயலாளரின் பேச்சு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கை, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி உறுதியாகக் கேட்கும் என்றும், இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து கட்சியின் தேசியத் தலைமையிடம் ஏற்கனவே பேசிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அல்லது இழிவாகப் பேசுகிறார்களோ, அவர்களிடம் எந்தவிதத் தயவுதாட்சணியமும் காட்டப்படாது என்று மாணிக்கம் தாகூர் ஆவேசமாகத் தெரிவித்தார். “காங்கிரஸுக்கும் தன்மானம் உண்டு, நாங்களும் திருப்பி அடிப்போம்” என்று கூறிய அவர், ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் கௌரவமும் தங்களுக்கு மிக முக்கியமானது என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்தார். கூட்டணி தர்மத்தை மீறிச் செயல்படுபவர்களைச் சும்மா விட்டுவிடப் போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.
