அரசியலை ஆட்டிப்படைக்கும் ‘ஜோதிட வைரஸ்’…. விஜய்யைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனிலும் அதிர்ச்சி மாற்றம்… மாணிக்கம் தாகூர் எடுத்த திடீர் முடிவு…!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

தமிழக அரசியலில் அண்மைக் காலமாக ஜோதிட மற்றும் வாஸ்து நம்பிக்கைகள் புதிய அலையை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் தங்களின் முக்கிய முடிவுகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் அலுவலக அமைப்புகளைக்கூட வாஸ்து மற்றும் ஜோதிட ஆலோசனைகளின் படியே மாற்றி அமைத்து வருகின்றனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகப் பல்வேறு ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்ட முதல்வர் விஜய், ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நிறங்களில் ஆடைகளை அணியத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, வாஸ்து காரணங்களுக்காகத் தலைமைச் செயலகத்தில் இருந்த தனது அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முதல்வர் விஜய்யின் இந்த வாஸ்து சார்ந்த நகர்வுகள் தற்போது மற்ற கட்சித் தலைவர்களையும் தொற்றத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் தனது அலுவலக அறையை வாஸ்து முறைப்படி மாற்றத் திட்டமிட்டுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனின் தரைத்தளத்தில் உள்ள மாநிலத் தலைவருக்கான விசாலமான அறையிலிருந்து, கட்டடத்தின் இரண்டாவது தளத்திற்குத் தனது அறையை மாற்ற அவர் முடிவு செய்துள்ளார். “உயரமான இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டும்” என்ற நோக்கில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இது குறித்து அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கதர்ச் சட்டையினர் தெரிவிக்கின்றனர்.

   

மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த வாஸ்து மற்றும் ஜோதிட மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஜோதிடர் முன்பே கணித்துக் கூறியதை நாமும் பின்பற்றியிருக்கலாம்” என்று தனது மகனிடம் புலம்பியதாக வெளியாகும் தகவல்கள், இத்தகைய நம்பிக்கைகள் கட்சி எல்லைகளைத் தாண்டி அனைத்துத் தலைவர்களிடமும் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. அறிவியலை மட்டுமே நம்புவதாகக் கூறப்படும் சூழலிலும், “வாஸ்து என்பதும் ஒரு அறிவியலே” என்ற வாத முன்வைப்புகளுடன் தலைவர்கள் இத்தகைய மாற்ற நியாயங்களை உருவாக்கி வருகின்றனர்.

   

அலுவலக மாற்றங்கள் ஒருபுறமிருக்க, அரசியல் வியூகங்களிலும் தலைவர்கள் புதிய பாதைகளை அமைத்து வருகின்றனர். முன்னர் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, தனக்கென தனியாக ‘வார் ரூம்’ அமைத்துச் செயல்பட்ட பாணியை மாணிக்கம் தாகூரும் பின்பற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. கட்சித் தலைமையின் அதிகாரப் பூர்வமான செயல்பாடுகளுக்கு அப்பால், தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக இத்தகைய நவீன அமைப்புகளை உருவாக்குவதும், அதே வேளையில் பாரம்பரிய வாஸ்து நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் தமிழக அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.