பட்டப்பகலில் பயங்கரம்…. சிவகங்கையில் கதற கதற பெண்ணின் காதை அறுத்து நடந்த கொடூரம்…. தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி….!

By Nanthini on ஐப்பசி 30, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை – சிவகங்கைச் சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. பள்ளி வளாகக் குடியிருப்பில் வசித்து வந்தவர் வசந்தமல்லிகா. சி.எஸ்.ஐ. பள்ளி விடுதி வார்டனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தன் கணவர் ஈஸ்வரனுடன் இங்கு வசித்து வந்தார். இவர்களது இரு மகள்களில் ஒருவருக்குத் திருமணமாகித் தேனியிலும், மற்றொருவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியும் வருகின்றனர். ஈஸ்வரன் உள்ளூரில் உள்ள ஆப்டிகல் கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் ஈஸ்வரன் வேலைக்குச் சென்றுவிட, வசந்தமல்லிகா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சிலர், பட்டப்பகலில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். வசந்தமல்லிகாவின் பின் தலையில் பலமாகத் தாக்கிய அக்கிரமக்காரர்கள், அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

   

கொலை வெறியில் ஈடுபட்ட அக்கூட்டம், இறந்து கிடந்த வசந்தமல்லிகாவின் கழுத்திலிருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியைக் கழற்றியதுடன், அவரது காதையும் அறுத்து தோடுகளைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. மாலை 3 மணியளவில் வீட்டிற்குத் திரும்பிய ஈஸ்வரன், இரத்த வெள்ளத்தில் தன் மனைவி பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறித் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மானாமதுரை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினருடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆள்நடமாட்டம் நிறைந்த பகுதியில் நகைக்காக முதிய பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.