தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மிர்பெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவருக்கு எதிரான போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆம் தேதியன்று அல்மாஸ் கூடா பகுதியைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் ரெட்டி என்ற நபர், சிறுமி ஒருவர் குளித்துக்கொண்டிருந்தபோது அதனைத் தனது செல்பேசியில் ரகசியமாக வீடியோ எடுத்ததாகப் புகாரளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், காவல்துறையினர் தன்னை எந்நேரமும் கைது செய்வார்கள் என்ற பயத்தில் தலைமறைவாகியிருந்த ஹர்ஷவர்தன் ரெட்டி, அதில்பட்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துர்காயங்கல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
