வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த காந்தி மற்றும் ராசாத்தி தம்பதியினர், பிழைப்புத் தேடி ஆந்திர மாநிலம் போயகொண்டா பகுதிக்குச் சென்று கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். வறுமையான சூழலில் அங்கேயே தங்கி வாழ்ந்து வந்த நிலையில், ராசாத்திக்கும் அங்கு வசித்து வந்த நரசிம்மலு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த காந்தி இது குறித்து தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் கோபித்துக் கொண்ட ராசாத்தி, தனது கணவரைப் பிரிந்து காதலன் நரசிம்மலுவுடன் செல்லத் தொடங்கினார்.
மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் தனது நான்கு வயது மகனுடன் மீண்டும் குடியாத்தத்திற்கே திரும்பிய காந்தி, சில காலம் அங்கேயே வசித்து வந்தார். இருப்பினும், மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆந்திராவிற்குச் சென்று ராசாத்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் காந்தியைத் தீர்த்துக்கட்ட ராசாத்தியும் அவரது காதலன் நரசிம்மலுவும் கொடூரமானத் திட்டம் தீட்டியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மாலை, நரசிம்மலு தனது நண்பர்களுடன் சேர்ந்து காந்தியை மது அருந்தலாம் என ஆசை வார்த்தை கூறி ஆள்நடமாட்டமற்ற காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அனைவரும் மது அருந்திய பிறகு, திட்டமிட்டபடி நரசிம்மலுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து காந்தியை சரமாரியாகத் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தந்தையுடன் சென்ற நான்கு வயது சிறுவன், காட்டில் தனது தந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு இரவு முழுவதும் அழுதுகொண்டே அங்கேயே தவித்துள்ளான்.
மறுநாள் காலை அந்தச் சிறுவன் அழுதுகொண்டே அருகில் இருந்த ஊருக்குச் சென்று, அங்கிருந்த அங்கன்வாடி உதவியாளரிடம் “அப்பாவை அடித்துப் போட்டுவிட்டார்கள்” என்று கூறி அழைத்துச் சென்றுள்ளான். இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீசார், காந்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தலைமறைவாக இருந்த ராசாத்தி, நரசிம்மலு உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலால் தந்தை கொல்லப்பட்ட நிலையில், அனாதையாக நின்ற அந்த நான்கு வயது சிறுவன் தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
