“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அதற்குச் சான்றாக, தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் அருகே யூடியூப் வீடியோக்களைப் பார்த்துத் திட்டமிட்டு விவசாயி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மிகுண்டா மண்டலம் மடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ஜி. மகேஷ் என்ற விவசாயி, பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த குத்தகை விவசாயியான பி. மோகிலி (51) என்பவரைக் கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 27ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அங்குசாபூரைச் சேர்ந்த மோகிலி தனது சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மடிபள்ளி புறநகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மறைந்திருந்த மகேஷ், திடீரென மோகிலியை வழிமறித்துத் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அவரது தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மோகிலி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, உயிரிழந்த மோகிலியின் மனைவி சாரதா கொடுத்த தகவலின்படி, அங்குசாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவிடம் தவறாக நடந்துகொண்ட விவகாரத்தில் மகேஷுக்கும் மோகிலிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மகேஷின் மொபைல் போன் இருப்பிடத் தரவுகளை ஆய்வு செய்த போலீசார், அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்தபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

   

போலீசாரின் தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்ட மோகிலி ஏற்கனவே ஒரு பெண்ணை வன்புணர்வு செய்ய முயன்ற வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்தவர் என்பதும், அதற்குப் பிறகும் அவர் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், மோகிலியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக யூடியூப் தளத்தில் ‘கொலை செய்வது எப்படி’, ‘போலீசாரிடம் இருந்து தப்பிப்பது எப்படி’ மற்றும் ‘ஆயுதங்கள் தயாரிப்பது எப்படி’ போன்ற வீடியோக்களைத் தேடிப் பார்த்து, மிகக் கவனமாகத் திட்டமிட்டு இக்கொலையை அரங்கேற்றியுள்ளார். தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகேஷ் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.