அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் மேலும் ஐந்து முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கிய பொறுப்புகளை துறப்பதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, அமைப்புச் செயலாளர்களான தங்கமணி, பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி ஆகியோருடன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் அருண்மொழித்தேவன் மற்றும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எஸ்.எம். சுமார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். எனினும், இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள தங்களது கடிதத்தில், கட்சிப் பதவிகளில் இருந்து விலகினாலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாகத் தொடர்ந்து நீடிப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்; இந்த அடுத்தடுத்த ராஜினாமாக்கள் தற்போதைய தமிழக அரசியலிலும் அதிமுக உட்கட்சி வட்டாரத்திலும் விவாதங்களை கிளப்பியுள்ளன.
