குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது தளத்தில் நிதின் ஆதியா (57) என்ற நபர் வசித்து வருகின்றார். இவர் பத்தாவது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் இடத்தில் படுத்து அப்படியே தூங்கிவிட்டார். இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த அவர் அப்படியே உருண்டு கீழே விழுந்துள்ளார். பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் எட்டாவது மாடியில் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் க்ரில் கம்பிகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பிறகு முதன் முதலில் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பத்தாவது மாடியில் இருந்து விழுந்த நபர் ஜன்னல் கம்பியில் சிக்கி உயிர்பிழைத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
