பெரும் பரபரப்பு..! “மு.க அழகிரியை திமுகவில் சேருங்க” செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்..!!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி நபர் ஒருவர் 100 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் (57) என்பவர், தற்போது கோவில்பட்டி சண்முகா நகரில் வசித்துக்கொண்டு மோட்டார் வாகன உரிமம் தொடர்பான ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை திடீரென தாமஸ் நகர் பகுதியிலுள்ள தனியார் செல்போன் டவர் மீது கையில் பெட்ரோல் கேனுடன் ஏறி, மு.க.அழகிரியை திமுகவில் இணைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாரியப்பன் என்ற காவலர் ஜானிடம் நயமாகப் பேசி அவரது கவனத்தைத் திசைதிருப்பினார். காவலரின் இந்தத் துரித நடவடிக்கையால், ஜான் தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை கீழே போட்டார். இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டாலும், ஜான் தொடர்ந்து டவரின் உச்சிப் பகுதியிலேயே அமர்ந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

   

சுமார் 100 அடி உயரத்தில் ஆபத்தான நிலையில் அமர்ந்துள்ள ஜானைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கத் தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வினோதமான போராட்டத்தைக் காண அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மு.க.அழகிரி ஆதரவாளரின் இந்தத் திடீர் தற்கொலை மிரட்டல் முயற்சி, கோவில்பட்டி மற்றும் அரசியல் வட்டாரங்களில் இன்று பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.