கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவன் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த தர்மசீலன் (30) என்பவர் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மஞ்சு செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் இவர்கள் இருவரும் மஞ்சுவின் தந்தையான பெரியசாமியின் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மசீலன் துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் தர்மசீலன் மற்றும் மஞ்சுவின் அறை கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெரியசாமி அவர்களுடைய அறைக்கு சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கதறி அழுதபடி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மஞ்சுவின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது. மேலும் தர்மசீலன் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் தர்மசீலன் தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
