சென்னையைச் சேர்ந்த பிலோமினா ராணி என்பவருக்குச் சொந்தமான வளசரவாக்கம் ஸ்ரீதேவி கார்டனில் உள்ள 6,772 சதுர அடி நிலத்திற்கு, லீமாராஜ் என்பவர் போலி வாரிசு சான்றிதழ் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார். இந்த போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, ஹரிநாராயணன் (60) என்பவருடன் இணைந்து புதுடெல்லியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து ரூ.37 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாகப் பிலோமினா ராணி 2007-ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். எனினும், ஹரிநாராயணன் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். எழும்பூர் முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்குப் பிணைக்கட்டளை பிறப்பித்த நிலையில், மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை போலிஸார் அவரைப் பெங்களூரில் வைத்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 20 ஆண்டுகள் கழித்து குற்றவாளியைப் பிடித்த தனிப்படையைப் போலிஸ் ஆணையர் ஏ.அமல்ராஜ் பாராட்டினார்.
