கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பைனான்ஸ் தொழிலதிபர் ஸ்ரீநாத், ஆந்திராவின் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபாகருக்கு அவசரத் தேவைக்காக ₹40 லட்சம் கடனாகக் கொடுத்திருந்தார். ஆனால், ஒரு வாரத்தில் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறிய பிரபாகர், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், பணம் கேட்டு நேரில் வரும்போதெல்லாம் பல்வேறு பொய்களைச் சொல்லி வந்துள்ளார்.
பணம் கேட்டுத் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த பிரபாகர், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி குப்பம் வந்த ஸ்ரீநாத்துடன் சண்டையிட்டு அவரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். ஸ்ரீநாத் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஆந்திரா-கர்நாடகா போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். ஸ்ரீநாத்தின் செல்போன் குப்பத்தில் சுவிட்ச் ஆஃப் ஆனதை அறிந்த போலீசார், பிரபாகரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆரம்பத்தில் மறுத்த பிரபாகர், இறுதியில் குப்பம் நகராட்சிக்குட்பட்ட அமராவதி காலனியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றின் அருகில் உடலைப் புதைத்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி பிரபாகர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது.
