மலையாள சினிமாவில் காமெடி நடிகராக குணசித்திர நடிகராக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் சீனிவாசன். அவருக்கு வயது 69. உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று காலை கேரளாவில் கடந்த 1977ம் ஆண்டில் மலையாளத்தில் பிஏ பேக்கர் இயக்கிய மணிமுழக்கம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான அவர் கடந்த 48 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 225 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
சீனிவாசன் நடிகராக மட்டுமின்றி கதாசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் டப்பிங் கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர். கிட்டத்தட்ட 45 படங்களுக்கு மேல் அவர் கதை எழுதியிருக்கிறார். பிரபல மலையாள இயக்குனர்கள் பிரியதர்ஷன் சத்யன் அந்திக்காடு ஆகியோரது படங்களில் சீனிவாசன் இணைந்து கதை எழுதிய பல படங்கள், வெள்ளிவிழா கண்டிருக்கின்றன.
தமிழில் பாண்டியராஜன் எஸ்வி சேகர் நடித்த கதாநாயகன் படம், மலையாளத்தில் சீனிவாசன் எழுதிய கதையில் உருவானது. சீனிவாசன் எழுதிய கதபறயும் போல் படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். இந்த படம்தான் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் குசேலன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1983ம் ஆண்டில் நடிகர் சீனிவாசனுக்கு சிந்தா விஷ்டாயாயா சியாமளா என்ற படத்துக்காக மத்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. கேரளா அரசின் விருது, பிலிம்பேர், ஆசியாநெட் உள்ளிட்ட பல விருதுகளை நடிகராக, சிறந்த கதாசிரியராக பலமுறை பெற்றவர் சீனிவாசன். தனது 2019ம் ஆண்டு வரை பிஸியாக நடித்து வந்த சீனிவாசன், 2020ம் ஆண்டுக்கு பிறகு 7 படங்களில் மட்டுமே அவர் நடித்தார்.
தமிழில் பார்த்திபன் நடித்த புள்ள குட்டிக்காரன் மற்றும் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா ஆகிய 2 படங்களில் சீனிவாசன் நடித்திருக்கிறார். அவர் மலையாளம் தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடிக்கவில்லை. மறைந்த நடிகர் சீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மறைந்த மலையாள நடிகர் சீனிவாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் அவர் எனது கிளாஸ்மேட். அருமையான நடிகர். நல்ல மனிதர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
