திருநெல்வேலி மாநகராட்சியில் திமுகவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் 15-வது வார்டு கவுன்சிலர் அஜய் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கவுன்சிலர் அஜய்க்கு சால்வை அணிவித்து தவெக-வில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாகவே நெல்லை மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெக-வை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தற்போது ஒரு மாநகராட்சி கவுன்சிலரே இணைந்துள்ளது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக-வின் செல்வாக்கையும் பலத்தையும் பறைசாற்றுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கட்சியில் இணைந்தது குறித்து பேசிய கவுன்சிலர் அஜய், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் கொள்கைகளாலும் நற்பணிகளாலும் கவரப்பட்டு நான் இக்கட்சியில் இணைந்துள்ளேன். இனி தவெக இயக்கத்தின் வழியில் நின்று மக்கள் பணியைத் தொடர்ந்து செவ்வனே செய்வேன்” எனக் குறிப்பிட்டார். திமுகவின் கவுன்சிலர் ஒருவர் தவெக-வில் இணைந்துள்ள இந்தச் சம்பவம், நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் திருநெல்வேலி மாநகராட்சி திமுக நிர்வாகிகளிடையே அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
