திமுகவின் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளரான திண்டுக்கல் ஜெயன், கட்சியிலிருந்து திடீரென விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக திமுகவில் தீவிரமாகப் பயணித்து வந்த அவர், தனது அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாகத் தனக்கு வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கும், குறிப்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கும் அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
ராணுவப் பணியிலிருந்து விலகி, மத்திய அரசின் எல்.ஐ.சி. உயர் பதவியைத் துறந்து திமுகவில் இணைந்தவர் ஜெயன். திண்டுக்கல்லின் முன்னணி தொழிலதிபராகவும் ரியல் எஸ்டேட் பிரமுகராகவும் அறியப்படும் இவர், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளராக வலம் வந்தவர். ஐ.பெரியசாமியின் அரவணைப்பால் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் பொறுப்பைப் பெற்றதுடன், போடி மற்றும் கம்பம் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராகவும் திறம்படப் பணியாற்றித் கட்சியின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட திமுகவில் நிலவிய உட்கட்சி அரசியலும் அதிகாரப் போட்டி மாற்றங்களும் ஜெயனுக்குப் பெரும் சோர்வை ஏற்படுத்தின. திண்டுக்கல் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, உள்ளூர் மட்டத்தில் அவர் திட்டமிட்டே ஓரம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தான் நம்பிவந்த ஐ.பெரியசாமி தரப்பிலிருந்தும் தனக்கு உரிய ஆதரவும் நியாயமான விளக்கமும் கிடைக்கவில்லை என்ற மனப்புழுக்கம் அவரிடம் இருந்ததாகக் கட்சி உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் கம்பம் மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றியும், தனது உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்காததும், கட்சிக்குள் தன் மீது திட்டமிட்டுத் தொடரப்பட்ட அவதூறுகளுமே இந்தப் அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணங்களாகும். தமக்கு நெருக்கமானவர்களிடம் கூட கலங்கிக் கூறிய அவர், இறுதியில் மனவேதனையுடன் இந்தப் பதவியைத் துறந்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, ஜெயன் வேறு எந்த அரசியல் கட்சியிலும் உடனடியாக இணையமாட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர். எனினும், ஒரு நீண்ட கால விசுவாசியும் முக்கியத் தொழிலதிபருமான நிர்வாகி திடீரெனக் கட்சியைவிட்டு வெளியேறியிருப்பது, திண்டுக்கல் மாவட்ட திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் உட்கட்சிப் பூசல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
