மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 14 வயது சிறுவன் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டிலிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நண்பருடன் அதிகாலை நேரத்தில் வெளியே சென்றுள்ளார். ஜாக்ருதி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அந்த ஸ்கூட்டர் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிறுவன் கணேஷ் மகாமுனி மற்றும் அவருடன் சென்ற நண்பர் ஆர்யன் பாஸ்வான் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்குக் காரணமான சரக்கு வாகனத்தின் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுவர்களின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயது வரம்பை எட்டாத சிறுவர்கள் வாகனங்களை இயக்க அனுமதிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
