தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக மக்களை கவரும் வகையில் அதிரடியான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் மகளிர் உரிமைத்தொகை. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விரைவில் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் புதிதாக 17 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஒன்பது லட்சம் பேர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தீபாவளி பரிசாக அவர்களது வங்கி கணக்கில் அடுத்த மாதம் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயணர்களின் எண்ணிக்கை 1.24 கோடியாக அதிகரிக்கும்.
