தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர். இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகின்ற 15-ம் தேதி தகுதி வாய்ந்த பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் நிச்சயம் வரும் என உறுதியளித்துள்ளார். இதனிடையே வரும் நாட்களில் பைனாளிகளின் வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை அறிய ஒரு ரூபாய் சோதனை அடிப்படையில் செலுத்தப்பட உள்ளது. இதனால் உங்கள் வங்கி கணக்கில் KYC, செல்போன் எண்ணை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
