பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க…. உரிமைத் தொகை ரூ.1000 பெற மீண்டும் வாய்ப்பு….! ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி…?

By Devi Ramu on தை 30, 2026

Spread the love

தமிழக அரசு மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டு, அதில் விண்ணப்பித்த பலருக்கு உரிமைத் தொகை கிடைக்காத சூழல் நிலவுகிறது. அவ்வாறு விண்ணப்பித்தும் பணம் வராத தகுதியான பயனாளிகள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு தற்போது வாய்ப்பளித்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு வசதியை இரண்டு வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்று, அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது பொதுச் சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். அல்லது வீட்டிலிருந்தபடியே www.kmut.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ‘குறைதீர்வு’ என்ற பகுதியைத் தேர்வு செய்தும் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பதாரரின் பெயர், குடும்பத் தலைவர் பெயர், குடும்ப அட்டை எண் மற்றும் கைப்பேசி எண் ஆகிய விவரங்களைக் கொடுத்தவுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி (OTP) வரும். அதைப் பயன்படுத்திப் புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.

   

மேல்முறையீடு செய்யும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மற்றும் வங்கிக் கணக்கு புத்தக விவரங்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். இவ்வாறு ஆன்லைன் வழியாகச் சமர்ப்பிக்கப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஆவணங்களைச் சரிபார்த்து, விண்ணப்பதாரர் தகுதியானவர் என்று உறுதி செய்த பின்னர், அவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

   

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இப்போது மேல்முறையீடு செய்ய முடியும். அதே போல, ஏற்கெனவே குறைதீர்வு மனு அளித்து அது நிராகரிக்கப்பட்டிருந்தால், அதே குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீண்டும் விண்ணப்பிக்க இயலாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.