நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர்கள் பிரியப்போவதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பொதுவெளியில் ஒருவரையொருவர் அவதூறாகப் பேசவோ அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடவோ கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடிகர் ரவி மோகன் கடந்த மே 16-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாக ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தச் செயலுக்காக ரவி மோகன் நீதிமன்றத்தில் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரினார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் ரவி மோகன் தனக்கு ஜீவனாம்ச பணம் தரவில்லை என்று கூறி, இடைக்கால ஜீவனாம்சம் வழங்கக் கோரி ஆர்த்தி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைச் சமர்ப்பித்தார்.
ஆர்த்தியின் இடைக்கால ஜீவனாம்ச மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த இரண்டு வாரக் காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரி ரவி மோகன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்ற ஆர்த்தி தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, ரவியின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், இது தொடர்பாகக் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டார்.
