“யாராவது காப்பாத்துங்க… ஏரியில் கேட்ட அலறல் சத்தம்”…. ஓடிச்சென்று உயிரைக் காப்பாற்றிய மா.சுப்பிரமணியன்….. வேடந்தாங்கல் ஏரியில் நடந்த நிஜ த்ரில்லர் சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வழக்கறிஞர் பரந்தாமனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று காலை வேடந்தாங்கல் ஏரிப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த மா.சுப்பிரமணியன், ஏரியின் ஒரு பகுதியிலிருந்து எழுந்த உதவிக்கான குரல் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்குள்ள புதைசேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல், இரவு முழுவதும் தவித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரைக் கண்டு உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்.

இதைத் தொடர்ந்து, அப்பகுதி உள்ளூர் மக்களின் உதவியோடு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரைச் சேற்றிலிருந்து பத்திரமாக மீட்ட மா.சுப்பிரமணியன், அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். ஆபத்தான சூழலில் இருந்த இளைஞரைச் சாதுரியமாக மீட்டு மருத்துவம் அளித்த மா.சுப்பிரமணியனுக்கு இளைஞரின் குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.