‘என்னால் நாடகத்த விட்டுட்டு சினிமாவுக்கு வர முடியாது’… ரத்தக் கண்ணீர் படத்தில் நடிக்க இப்படியெல்லாம் கண்டீஷன் போட்டாரா M R ராதா?

By vinoth on ஆனி 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் என்றால் அது சிவாஜிதான் என்று இப்போதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சிவாஜியே நடிப்பில் தன்னுடைய முன்னோடியாக, ஆதர்சமாக நினைத்தவர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா.

   

ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர். எம் ஆர்  ராதாவுக்கு திருப்புமுனையாக அமைந்த ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் அவர் நடிக்க போட்ட கண்டீஷன்களைப் பற்றி பார்ப்போம்.

   

#image_title

 

ரத்தக் கண்ணீர் நாடகம் வெற்றிகரமாக ஓடியதும் பெருமாள் முதலியார் ( காங்கிரஸ் காரர்,  கடவுள் பக்தி கொண்டவர்) அதை திரைப்படமாக எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஏற்கனவே சினிமா மேல் விரக்தியில் இருந்த ராதா, பல கண்டீஷன்களைப் போட்டு அதற்கு சம்மதம் என்றால் நான் நடிக்கிறேன் என்றாராம்.

அப்படி அவர் போட்ட கண்டீஷன்கள்

  • நான் நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு ஓய்வாக இருக்கும்போதுதான் ஷூட்டிங்கில் கலந்துகொள்வேன். என்னால் சினிமாவுக்காக நாடகத்தை விட முடியாது.
  • ரத்தக் கண்ணீர் படத்தில் கடவுளை கேலி செய்து வரும் வசனங்களை எல்லாம் அப்படியே படமாக்க வேண்டும்.
  • அதே போல கதாநாயகன் தன் மனைவியை நண்பனுக்கு திருமணம் செய்துவைத்து விட்டு உயிர்விடும் காட்சியையும் அப்படியே படமாக்க வேண்டும்.
  • எனக்கு சம்பளமாக ஒன்னேகால் லட்சம் ரூபாய் வழங்கவேண்டும். (அப்போது கேபி சுந்தரம்மாள் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார்)

எனக் கூறியுள்ளார். இதற்கெல்லாம் ஒத்துக்கொண்டு அவரை வைத்து அந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்து பெரும் வெற்றியைப் பெறவைத்துள்ளனர் படக்குழுவினர்.