தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க ஆளுமைகளில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் கொடுமுடியாக விளங்கிய ராதா, 1930 களிலேயே சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு சினிமா ஒத்துவரவில்லை. தொடர்ந்து நாடகங்களிலேயே நடித்து புகழ் பெற்றார். அவர் நடித்த நாடகங்களில் ரத்தக் கண்ணீர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.
அதனால் அந்த நாடகத்தைப் படமாக்க பலரும் விரும்பினர். அப்படி 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பும் மோகன் என்ற கதாபாத்திரத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
பகுத்தறிவு பார்வையோடு இந்தியக் கலாச்சாரத்தின் மூட நம்பிக்கைகளை எள்ளி நகையாடும் ஒரு கதாபாத்திரம் அது. அந்த கதாபாத்திரத்திற்கு தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் அழியாப் புகழைப் பெற்றுத்தந்தார். அந்த படத்தில் அவருக்குப் பிறகு மிகச்சிறப்பாக நடித்தவர் எம் என் ராஜம். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 14 வயதுதான். அப்போதே 50 வயதை நெருங்கிய எம் ஆர் ராதாவின் காதலியாக அவர் நடித்திருப்பார்.
காந்தா என்ற வில்லத்தனம் கொண்ட நடனமங்கையாக நடித்த அவர் எம் ஆர் ராதாவின் சொத்துகளை எல்லாம் சுருட்டிக்கொண்டு அவரைக் கைவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்படி ஒரு காட்சியில் அவர் எம் ஆர் ராதாவை எட்டி உதைப்பது போல காட்சி எடுக்கப் படவேண்டி இருந்ததாம்.
ஆனால் சீனியர் நடிகரான எம் ஆர் ராதாவை எப்படி எட்டி உதைப்பது என்று தயங்கியுள்ளார் ராஜம். எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லையாம். ஒரு கட்டத்தில் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு அவரிடம் சென்று “இந்த படத்தில் எல்லாக் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறாய். ஆனால் இந்த காட்சியில் நீ நடித்தால் மட்டும்தான் இந்த படத்தில் இருக்க முடியும். இல்லையென்றால் உன்னை நீக்கிவிட்டு வேறொருவரைப் போட்டு எடுத்துவிடுவோம்” என மிரட்டியதும்தான் அந்த காட்சியில் நடித்தாராம்.
