தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான ஜெயலலிதா. வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமான ஜெயலலிதா வெகு விரைவிலேயே அப்போது உச்சத்தில் இருந்த எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
ஜெயலலிதாவின் நடிப்பு திறமையில் கவரப்பட்ட எம் ஜி ஆர், அவரை தன்னுடைய பல படங்களில் பயன்படுத்தினார். எம் ஜி ஆரோடு அதிக படங்களில் கதாநாயகியாக இணைந்து நடித்தவர் ஜெயலலிதாதான். இருவரும் இணைந்து 28 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
அதன் பிறகு எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்ததும் அவரது கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜெயலலிதா. அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார் எம் ஜி ஆர். இதற்கிடையில் 1975 க்கு பிறகு ஜெயலலிதாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தன.
இந்நிலையில்தான் ரஜினிகாந்த் நடித்த பில்லா திரைப்படத்தில் அவரோடு நடிக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார் ஜெயலலிதா. அதற்குக் காரணம் எம் ஜி ஆர் தான் என்று சொல்லப்படுகிறது. அப்போது ரஜினி மீது ஏதோ மனவருத்தத்தில் இருந்துள்ளார் எம் ஜி ஆர். அதனால் ஜெயலலிதாவை அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என அவர் தடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
அதே போல தன்னோடு நெருக்கமாக இருந்த ஆர் எம் வீரப்பன், ரஜினியை வைத்து தொடர்ந்து படங்களைத் தயாரித்த போதும், அவர் மேல் கோபம் கொண்டு அதையும் தடுத்து விட்டாராம் எம் ஜி ஆர். அதன் பின்னர் எம் ஜி ஆர் மறைந்த பின்னரே ஆர் எம் வீரப்பன் மீண்டும் ரஜினியோடு இணைந்து படம் பண்ணினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் கமல்ஹாசன், பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட பலரோடு இணக்கமாக இருந்த எம் ஜி ஆர், ரஜினிகாந்த் மேல் மட்டும் ஏதோ கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.
