எம்ஜிஆர் பத்து படங்களில் கதாநாயகனாக நடித்து பெற்ற புகழை சிவாஜி கணேசன் ஒரே படத்திலேயே பெற்றுவிட்டார். பராசக்தி படம் வந்ததும் அவரை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சூழ ஆரம்பித்தன. இதனால் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
அந்த நேரத்தில்தான் சிவாஜியிடம் தெலுங்கு பட தயாரிப்பாளரான ஸ்ரீராமுலு நாயுடு வந்து ‘மலைக்கள்ளன்’ படத்தைக் கூறி அதில் நடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இப்போது என்னால் நடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக உள்ளேன் எனக் கூற, அவரோ அப்படியானால் நான் ஒரு மாதம் கழித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். ஒரு மாதம் கழித்து வந்தாலும் நடிக்க முடியாதே என நினைத்த சிவாஜி ஒரு யோசனையை சொல்லியுள்ளார்.
ராமாராவிடம் “அண்ணே நான் இப்போது 10 படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும். அதுவுமில்லாமல் உங்கள் ஸ்டுடியோ கோயம்புத்தூரில் உள்ளது. என்னால் ஒரு படத்துக்காக அங்கு வந்து நடிக்க முடியாது.” என பணிவோடு மறுத்துள்ளார்.
அப்போது தயங்கிக் கொண்டிருந்த தயாரிப்பாளரிடம் “வேண்டுமென்றால் எம் ஜி ஆர் அண்ணனிடம் கேட்டுப் பாருங்கள்” என ஆலோசனைக் கூறியுள்ளார். ஏனென்றால் எம் ஜி ஆருக்கு அப்போது சில படங்கள் ஓடாததால் அவர் கைவசம் சிவாஜி அளவுக்குப் படங்கள் இல்லை. அதுமட்டுமில்லாமல் புராணக் கதை என்றால் அது சிவாஜியை விட எம் ஜி ஆருக்கு நன்றாக பொருந்தும் என்று அப்போதே பேச்சு இருந்தது.
அதைத் தொடர்ந்து தான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படமும் மாபெரும் வெற்றி பெற்ற ஜனாதிபதி விருது வாங்கியது. எம்ஜிஆர், பானுமதி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம் ஜி ஆரின் சூப்பர் ஸ்டார் அந்தாஸ்த்தை உயர்த்திய படங்களில் ஒன்றாக மலைக்கள்ளன் அமைந்தது.