தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.
எம் ஜி ஆர் வளர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ஆனதும், அதன் பின்னர் அவருடைய படங்களில் எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். பாடல்களுக்கான ட்யூனை ஓக்கே செய்வது முதல் பாடல் வரிகளில் கரெக்ஷன் சொல்வது வரை எல்லா முடிவையும் அவர் எடுப்பார் என்று சொல்வார்கள். இதனால்தான் ஏவிஎம் போன்ற பெருமைமிகு ஸ்டுடியோ அவரை வைத்து அதிக எண்ணிக்கையில் படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வளவும் அவர் செய்வது சினிமாவின் பல துறைகளிலும் அவருக்கு இருந்த அறிவால்தான் என வாதாடுபவர்களும் உண்டு.

இந்நிலையில் எம் ஜி ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த பாக்யராஜ் எம் ஜி ஆர் எவ்வளவு சென்சிட்டிவ்வான நபர் என்பதற்கு உதாராணமாக ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் அருப்புக்கோட்டை தேர்தலில் அவருக்காகப் பிரச்சாரம் செய்யப் போயிருந்தேன். அப்போது எனக்கு குழந்தை (சாந்தணு) பிறந்ததாகத் தகவல் வந்தது, நான் இனிப்பு வாங்கிக் கொண்டு சென்று அவரைப் பார்த்தேன்.
அவர் என்ன விஷயம் எனக் கேட்டார். நான் விஷயத்தை சொன்னதும் என்னை உடனே போய் பார்க்க சொன்னார். ஆனால் நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன் . பிரச்சாரத்தை முடித்துவிட்டுப் போகிறேன் என சொன்னேன். உடனே அவர் என் மனைவி இருந்த மருத்துவமனையில் ஒரு வாக்கி டாக்கி செட்டப்பை செய்துகொடுத்து அடிக்கடி நாங்கள் பேசிக்கொள்ள ஏற்பாடு செய்தார்” எனக் கூறியுள்ளார்.
