மற்றொரு கவிஞரின் பல்லவிக்கு பாட்டு எழுதின முத்துகுமார்… ரெண்டு பேர் மரணத்துக்கும் ஒரே நோய்தான் காரணமா?

By vinoth on ஜூன் 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 2000களுக்குப் பிறகு உருவான திரை பாடல் ஆசிரியர்களில் முக்கியமானவர் நா முத்துகுமார். அவர் பாடல் எழுதிய காலத்தில் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் அந்த ஆண்டுகளில் பாடல் எழுதியவர் அவராகதான் இருப்பார். அடுத்தடுத்து சைவம் மற்றும் தங்கமீன்கள் ஆகிய படங்களுக்காக சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதைப் பெற்றார்.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த முத்துக்குமார் கவிதைகளின் மேல் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பாடல்கள் எழுதுவதை நோக்கி தன்னை திசைதிருப்பிக் கொண்டார். சீமான் இயக்கிய வீரநடை திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானார்.

   

அதன் பின்னர் இளையராஜா இசையில் ‘எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே’ மூலம் அவருக்கு புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதன் பின்னர் அவர் செலவராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்கள் அவரை முன்னணிக் கவிஞராக்கின.

   

அதே போல இயக்குனர் ராம், ஏ எல் விஜய் ஆகியோர் கூட்டணியிலும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரின் குடிப்பழக்கம் மற்றும் மோசமான உடல்நிலை பராமரிப்பு ஆகியவற்றின் காரணமாக அவர் 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை வந்து உயிரிழந்தார். அது தமிழ் சினிமா உலகுக்கு பேரிழப்பாக அமைந்தது.

 

இந்நிலையில் அவரைப் போலவே பாடல் ஆசிரியர் வாசன் என்பவரும் மஞ்சள் காமாலை வந்துதான் இறந்தார். அவர் எழுதி பாதியிலேயே விட்டுச் சென்ற பாடல்தான் ஹலோ படத்தில் இடம்பெற்ற சலாம் குலாவு பாடல். அவர் எழுதிய பல்லவியை அப்படியே வைத்துக் கொண்டு மீதப் பாடலை முத்துகுமார் எழுதினார். கடைசியில் அவரும் மஞ்சள் காமாலையில்தான் இறந்துள்ளார் என்பதுதான் ஏற்க முடியாத சோகம்.