‘நான் உருகி உருகி காதலித்த பெண்ணை அவள் அப்பாவே என்னோடு பீச்சுக்கு அனுப்பிவைத்தார்’… வாலி பகிர்ந்த காதல் தோல்வி கதை!

By vinoth on ஆவணி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

   

எம் ஜி ஆருக்கு, சிவாஜிக்க்கும், ரஜினிக்கும், கமலுக்கும் காதல் ரசம் சொட்ட சொட்ட பாடல்கள் எழுதியவர் வாலி. அவரிடம் ஒரு நிகழ்ச்சியில் அவரின் காதல் அனுபவங்கள் பற்றி கேட்கப்பட்ட போது “நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். திருச்சியில் அவள் நாடகத்தில் எல்லாம் நடிப்பாள். பிரம்மாண்டமான அழகாக இருப்பாள். அவளைப் பார்க்கவே கூட்டம் கூடும்.

   

ஒருநாள் சென்னையில் அவளை அவளது அப்பாவோடு பார்த்தேன். அவர்கள் குடும்பம் அப்போது கஷ்டகாலத்தில் இருந்தது. என்னைப் பார்த்த அவளது அப்பா, நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். அப்போது எனக்கு எந்த வேலையும் இல்லை. அவளை என்னை பீச்சுக்கு அழைத்து செல்ல சொன்னார். பீச்சில் எங்கள் இருவரையும் விட்டு விட்டு அவர் எங்கோ சென்றுவிட்டார். திரும்பி வரவேயில்லை.

 

நான் அவளை பஸ் ஏற்றி அவளது வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டேன். யாரை உருகி உருகி காதலித்தேனோ, அவளை என்னால் அப்போது திருமணம் செய்ய முடியவில்லை. சில மாதங்கள் கழித்து அவள் வீட்டுக்குப் போனபோது சொந்தக்கார பையன் ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொண்டதாக சொன்னார்கள்.” என தனது முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.