திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த காதல் ஜோடி… 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த கதவு… ஜன்னல் வழியே பார்த்த போது காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனைக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ராகேஷ் பாத்ரா(23) என்பவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த சீமா நாயக் (21) என்ற பெண்ணும் தொழிலாளியாக வேலை செய்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. பிறகு அங்குள்ள ஒரு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவிபோல வாழ்ந்து வந்தனர்.

ஆனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று முன் தினத்திலிருந்து ராகேஷ் வசித்து வந்த வாடகை வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் அவருடைய செல்போனுக்கு அழைத்த போது அவர் எடுத்துப் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்க்கையில் சீமா தூக்கில் பிணமாக தொங்கியதையும் ராகேஷும் பிணமாக கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.

   

அப்போது கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு சீமா தூங்கிய பிறகு ராகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் மறுநாள் காலை எழுந்த சீமா காதலன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் தூக்கில் தொங்கிய துணியை வெட்டி உடலை கீழே இறக்கிவிட்டு பிறகு அவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரிய வந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அந்த வீட்டுக்கு இருவரும் வாடகைக்கு வந்த நிலையில் அடிக்கடி பணப்பிரச்சினையால் தகராறு வந்துள்ளது. சம்பவம் நடந்த இரவு ராகேஷ் மது குடிக்க பணம் கேட்டதாகவும் அதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதும் தெரிய வந்தது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.