தெலங்கானா மாநிலம் பெத்தகுண்டவெல்லி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பயண முகவர் தொட்டலா வெங்கடேஷ், தான் காதலித்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயமாகியதால் ஆத்திரமடைந்துள்ளார். அந்தப் பெண் தனக்குக் கிடைக்காத விரக்தியில், அவரது திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் ஒரு சதியைத் தீட்டியுள்ளார். அதன்படி, அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, அவருக்கும் தனக்கும் தவறான தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டு ஆபாசமான மற்றும் அவதூறு பரப்பும் சுவரொட்டிகளைத் தயாரித்துள்ளார். கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு, தனது நண்பர்களின் துணையோடு தங்கலபள்ளி மற்றும் என்சன்பள்ளி ஆகிய கிராமங்களின் பல்வேறு பொது இடங்களில் இந்த அவதூறு சுவரொட்டிகளை ஒட்டிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சுவரொட்டிகள் கிராம மக்களிடையே வேகமாகப் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சித்திப்பேட் போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் முதன்மைக் குற்றவாளியான வெங்கடேஷ் உட்பட அவதிக்கு உடந்தையாக இருந்த அஸ்விட் குமார், பானு பிரசாத், அவரது மனைவி ரேகா, ஈஸ்வர் மற்றும் நவீன் குமார் ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். மேலும், இக்குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அலைபேசிகளைப் பறிமுதல் செய்த போலீசார், பெண்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு சுவரொட்டிகளை அச்சிடும் நிறுவனங்களுக்கும், அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்பவர்களுக்கும் எதிராகக் கடுமையான சட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
