ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக கொறடாவுமான எ.வ.வேலு, சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியுள்ளார். இந்த வழக்கின் ஒரு பகுதியாக அவரது இல்லத்தில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதோடு, காவல்துறை விசாரணைக்கு ஆஜராகக் கோரி அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் குறிப்பிட்ட தேதியில் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், சென்னை திரும்பிய அவர், தன் மீதான விமர்சனங்களுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சம்மனுக்கும் விரிவான விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, தான் காவல்துறை விசாரணைக்கு பயந்து ஓடவில்லை என்றும், திட்டமிட்டபடியே தனது உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியதாகவும் திட்டவட்டமாகக் கூறினார். தனக்கு அலர்ஜி, இதயம் மற்றும் நரம்பியல் சார்ந்த பல்வேறு பாதிப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே சிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து இரவு பகலாகப் பணியாற்றியதால், பொதுத்தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக அவர் விளக்கமளித்தார்.
விசாரணை மற்றும் சோதனையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர், கடந்த மாதம் 15-ஆம் தேதியே சிங்கப்பூர் செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பித்து, 17-ஆம் தேதி விசா கிடைத்தவுடன் இண்டிகோ விமானத்தில் டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார். ஜூன் 25-ஆம் தேதி மதியம் தான் சிங்கப்பூர் புறப்பட இருந்த நிலையில், அன்றைய தினம் காலையில்தான் காவல்துறையினர் தனது வீட்டிற்குச் சோதனைக்கு வந்ததாகக் குறிப்பிட்டார். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி புகழ்வேந்தனிடம் தனது பயணச் சீட்டுகளைக் காண்பித்துவிட்டு, ஒரு நாள் தாமதமாக ஜூன் 26 அன்று சிங்கப்பூர் சென்று சிகிச்சையைத் தொடர்ந்ததாகவும் அவர் விவரித்தார்.
சிங்கப்பூரில் தனக்கு சிகிச்சையளித்த நரம்பியல், வயிறு, அலர்ஜி மற்றும் இதய நோய் நிபுணர்களான டாக்டர் லி கிம் பென், டாக்டர் பீட்டர் யங் கென், டாக்டர் செங் எங் குவான் மற்றும் டாக்டர் ஜெயராமன் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் தன்னிடம் தயாராக உள்ளதாக எ.வ.வேலு தெரிவித்தார். ஜூலை 3 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வந்தபோது, தனது மருத்துவக் காரணங்களை வழக்கறிஞர் மூலம் முறைப்படி கடிதமாக அனுப்பி, ஜூலை 12-க்குப் பிறகு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கோரியிருந்ததைச் சுட்டிக்காட்டினார். தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் கூறிய அவர், தப்பியோடிவிட்டதாகச் சிலர் பரப்பிய கற்பனைக் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிவித்தார்.
